~ அக்ஷ்யா கிருஷ்ணகுமார், யேல் பல்கலைக்கழகம்
மொழிபெயர்ப்பு – சிவலிங்கம் அனுஷா
இலங்கை தேயிலைத் தோட்டங்களிலிருந்து இந்தியாவுக்குக்கொண்டுவரப்பட்ட பாண் என்பது இலங்கைக்கு தொழிலாளர்களாக புலம்பெயர்ந்த இந்தியத் தமிழ் மக்களின் கதையைச் சொல்லும் ஒரு எளிய உணவாகும்.
ஒவ்வொரு வியாழனும் பாண், எனது இரவு உணவாக இருந்தது. பாண் ஒவ்வொரு முறையும் வாயில் வைத்து கடிக்கும்போது அதில் பெரிய சத்தம் ஒலிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது. பாணின் நடுவில் மென்மையான ஒருபகுதியும் இருக்கிறது. அது சம்பலுடன் சாப்பிடவே பொருத்தமாக இருந்தது. சம்பல் என்பது நறுக்கப்பட்ட மிளகாயை, துருவிய தேங்காய் துண்டுகளுடன் இறுதியாக அரைத்தெடுத்து கலந்த உணவாகும்.
மாசி தூள் அதன் மீது தெளிக்கப்படும் போது சம்பல் மிகவும் சுவையாக இருக்கும் என்று எனது பாட்டி சொல்லியிருந்தார். ஏனெனில் அது இயற்கையாகவே சுவை கொண்டிருப்பதாலும், அதற்கு நிகராக வேறெதுவும் இல்லையென்பதினாலுமே. உண்மையில், இலங்கையில் இருந்து வந்த இந்திய தமிழர்கள் இன்னும் சிலோன் எனச்சொல்லும் அளவிற்கு, அவரது சிறு வயதில் மாசி என்பது உப்பை போல் தினசரி சமையல்களில் காணப்பட்டதாம். சலிப்பான ருசியைத் தரும் பூசணி சாம்பார், சோறு, லேசாக எண்ணெயிடப்பட்ட கேரட் மற்றும் பீன்ஸ் ஆகியவற்றில் சேர்க்க இன்றும் வீட்டில் மாசியை பயன்படுத்தினாலும் அது மிகக் குறைவானதாக சமையல் பொருட்களை உபயோகிக்கவும், குற்ற உணர்ச்சியின் கவலைத்தனமான உணவு எனும் உணர்வைப் பெற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்தினர்.
ஒரு துளி கண்ணீர் போலான இலங்கைத் தீவை சிதற வைத்த, உள்நாட்டு போரின் காரணமாக இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு மீண்டும் வந்தடைந்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவளியை சேர்ந்த இலங்கையர்களுக்கு மத்தியில் எனது பாட்டியும் தாத்தாவும் இருந்தார்கள். எனது குழந்தை பருவ நினைவுகள் அனைத்தும் கடல் பயணங்களின் கதைகள், இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட தந்திகள், இரண்டாம் உலகப் போரின் உணவுப் பொருட்கள் மற்றும் இலங்கை காரமான உணவுகள் மற்றும் தொடர்புடைய விடயங்களுடன் நிரம்பியுள்ளன.
இப்போதெல்லாம், எனது கடந்த காலத்தின் தடயங்களை நான் தேடும்போது, இலங்கைக்கான உறவுகளையும் தொடர்புகளையும் எனது உணவுத் தட்டில் அடிக்கடி பார்க்கிறேன். அதில் முரண்பாடாக, எங்கள் வரலாறு ஆரம்பமாகுவதே எனது தாத்தா பாட்டியின் உணவு தட்டுகளின் வெறுமையான தோற்றத்துடன்தான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தென்னிந்தியாவில் பஞ்சத்தினால் பட்டினி இறப்புகள் தினசரி நடக்கும் சாதாரண விடயங்களாக மாறியது. இதன் விளைவாக, காவிரி ஆற்றங்கரையில் நெல் வயல்களின் ஓரத்தில் வாழ்ந்து வந்த விவசாயிகள் இலங்கையில் புதிதாக நிறுவப்பட்ட தேயிலைத் தோட்டங்களுக்கு தொழிலாளர்களாக குடிபெயர்ந்தனர். அவர்களில் எனது ஏழை மூதாதையர்களும் இருந்தார்கள். இன்றுவரை, திருச்சிராப்பள்ளியில் (திருச்சி என்றும் அழைக்கப்படுகிறது) காவிரி ஆற்றங்கரைக்கு அருகில் ஒரு பஸ் தரிப்பு நிலையம் ஒன்று உண்டு. அது ‘சிலோன் ஒபிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஊட்டச்சத்து குறைபாடுள்ள பல இளைஞர்கள் இலங்கைக்குச் செல்லும் கப்பலில் ஏறுவதற்கான உரிமம் பெற இந்த இடத்தில் நீண்டவரிசையில் காத்திருந்தனர். கடுமையான உழைப்புக்காக தினமும் கிடைக்கும் உணவு, இலவசமாக கிடைக்கும் கள்ளுத்தண்ணி மற்றும் குளிர்ந்த வானிலையை பெற்றுக்கொள்ளலாம், அதை அனுபவிக்கலாம் என்ற ஆசைகளால் அவர்கள் ஈர்க்கப்பட்டனர். இந்த ஆசையானது “ஓரளவு உண்மை” யும் கூட.
இந்திய தீபகற்பத்தின் தெற்கு முனையிலுள்ள தனுஷ்கோடியில் உள்ள ஒரு முகாமுக்கு மருத்துவ பரிசோதனைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பெரியம்மை நோய்க்கு / வசூரியவிற்காக தடுப்பூசி போடப்பட்டு, ஒரு வாரமாக உடலில் இருந்த வைரஸ்கள் மற்றும் கிருமிகளைக் அகற்ற மலத்தோடு பல்வேறு மாத்திரைகளை வழங்கினர். பின்னர், கால்நடைகளுக்கு ஈடு இணையற்ற வகையில், நெரிசலான கப்பல் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, பசுமையான கள்ளுத்தண்ணியின் ஏக்கத்துடன், சிலோன் எனும் அற்புத தேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவர்கள் வாழத் தொடங்கிய தோட்ட வாழ்க்கையானது, வாக்குறுதியளிக்கப்பட்ட அளவிற்கு அமையாத விடயமாகவே இருந்தது. அதில் ஒரேயொரு திருப்திகரமான விடயமாக, எனது முதியோர்கள் அவர்களின் பேரக்குழந்தைகளுக்கு நகைச்சுவையாக சொன்னது, “தேங்காய் பால் மற்றும் கருப்பட்டி சாறுடன் இணையும்போது கள்ளு தண்ணியின் சுவையோ….. சுவைதான்” என்று. ஆனால் எனது தாத்தா பாட்டி இந்தக் கதைக்கு உடன்படவில்லை. அவர்களுக்கு குளிர்காலத்தை சமாளிக்க காரமான இலங்கை உணவுகள் மற்றும் தேங்காய் பாலுடன் இணைந்த இலங்கை உணவுகள் மட்டுமே உதவின.
பல தசாப்தங்கள் கழித்து, பல மோதல்களிலிருந்தும் மாற்றங்களிலிருந்தும் தப்பிய எனது குடும்பத்தினரும் மற்றவர்களும் இன்னும் அவர்களுக்கே சொந்தமான சமையல் மரபுகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்று, இந்த மரபுகள் மெதுவாக, ஆனால் நிச்சயமாக எனது நினைவிலிருந்து மங்குவதை நான் காண்கிறேன்.
இந்தியத் தமிழ் வம்சாவளியை சேர்ந்த இலங்கையரான நான், இவ்வகையான கதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் ரகசியங்களுடன் தான் வளர்ந்தேன். ஒரு பிரிட்டிஷ் தோட்ட உரிமையாளரின் மகளின் விளையாட்டு தோழியாக இருந்த எனது பாட்டிக்கு கிடைத்த ரொட்டி, மர்மலேட், ஜாம் மற்றும் மாஜிரீன் சேர்ந்த காலை உணவைப் பற்றின நினைவுகள் இன்னும் அவரின் மனதில் ஒரு ஓரத்தில் பதிந்திருக்கின்றன. தோட்டங்கள் முழுவதுமாக சிதறியுள்ள தொழிலாளர்களின் தினசரி காலை உணவு, பாண் அல்லது கோதுமை மாவுடன் பெரிய தேங்காய் துண்டுகளை கொண்டு தயாரித்த ரொட்டியும் அதனோடு சேர்த்து உண்ணும் மிகக் காரமான சம்பலுமாகும். இது எனது வியாழக்கிழமை இரவு உணவிற்கு மிகவும் ஒத்துப்போகும்.
அதேபோன்று வெற்று இராத்தல் பாணுக்குள் அதிக காரமான குழம்பு ஒன்று போட்டு தயாரித்த தென் ஆப்ரிக்காவில் மிகவும் பிரசித்திபெற்ற தெரு உணவான பனீ சாவ் போன்ற ஒவ்வொரு விதமான பாண் வகைகள் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்ததை நாங்கள் பாத்திருக்கின்றோம். அதேபோல், இலங்கையில் உள்ள எனது முன்னோர்கள் தங்களது பாண்களுக்குள் காரமான சம்பலை வைத்து அதை கட்டிக்கொண்டு தேயிலைத் தோட்டத்திற்கு சென்றது, அந்த உணவுகளை வைப்பதற்கு பாத்திரங்கள் இல்லாமையாலேயே.
திருச்சியின் மலையகத் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் பாண் இன்றைக்கும் இருந்தாலும், பல வீடுகளில் மற்றும் இலங்கை உணவு வகைகள் இருக்கும் உணவகங்களில் பாண் காணப்படுவதில்லை. அதற்கு பதிலாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும், இந்த கரடுமுரடான பாண் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு தேவைப்படுபவர்களுக்கு, ஓய்வுபெற்ற தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களால் அவர்களின் கையாலையே அவரவர் வீடுகளுக்கு எடுத்து செல்வார்கள்.
இது தொடர்பில் அறியாதவர்களுக்கு இது சில நேரங்களில் ஒரு ‘ரகசிய நடவடிக்கை’ போல உணரக்கூடும்: திருச்சியில் உள்ள மலையக தமிழர்களிடையே மட்டுமே பாண் விற்கப்படுகிறது; இந்தச்சேவை முற்றிலும் தங்கியிருப்பது பேச்சு மூலம் வழங்கப்படும் விளம்பரங்களால் மட்டுமே. பாண் என்பது வீட்டில் சாப்பிடும் ஒரு சுவையான உணவாக அல்ல, ஒரு ஆறுதலான உணவாகத்தான் வழங்கப்படுகிறது;
மேலும், இந்த பாண் தயாரிப்பவர்கள் மற்றும் அவற்றை சாப்பிடுபவர்கள் தவிர, இந்த பாண் எனும் உணவின் வரலாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியலைப் பற்றி வேறொருவரும் அறிந்ததில்லை. பெரும்பாலும் இந்த பாண் எனும் உணவு இலங்கையிலிருந்து வந்த, இந்திய தமிழர்களின் உணவாக மட்டுமின்றி அவர்களின் அடையாளமாகவும் மாறிவிட்டது. அல்லது இந்திய மலையக மக்களின் அடையாளத்துடன் ஒன்றித்துவிட்டது. இருந்தும் வரலாறு மற்றும் நுகர்வு என்பன வெளிப்படையாக அடையாளமாக காணப்பட்டாலும், அது ஒரு கூட்டாக அல்லது குழுவாக பகிரப்பட்ட ஒரு இனத்தின் அல்லது புலம்பெயர்ந்தோரின் வாழ்க்கை போராட்டத்தின் அடையாளமாக எண்ண முடியாது. அது அவர்களின் அடையாளத்தைப் போலவே, நிகழ்நேரத் தேவையாக உள்ளது. அவை வரையறுக்கப்பட்ட மற்றும் தனித்துவிடப்பட்ட ஒரு சூழலில் (தற்போதைய வீடுகளில்) விட்டுவிட முடியாத ஒருவித பழைமைவாய்ந்த தவறின் நிகழ்கால தேவையாக காணப்படுகிறது. பாண் அல்லாத மாசி சம்பல் மற்றும் பிஞ்சுப் பிலாக்குழம்பு போன்ற உணவுகளையும் அவர்கள் இவ்வாறே உண்ணுகிறார்கள்.
அவ் வகையான உணவுகளை இன்னும் உருவாக்கி உண்பது, ஒருவிதத்தில் மனதில் ஆழமாக பதிந்திருக்கும் குற்ற உணர்வை உணர்வதற்கே என்றும் கூறமுடியும். ஆனால் இந்த சமூகம் அவர்களின் காலனித்துவகாலத்து வரலாறு மற்றும் வாழ்க்கை பயணங்களைப் பற்றி உரையாடுவதில் எப்போதும் தயக்கம் காட்டுகிறது என்று கூறுவது நியாயமற்றது.
திருச்சியில் ‘உராயூர்’ எனும் பிரதேசத்திற்கு வெளியே இருந்த கடைகளுக்கு மட்டும் இறைச்சி மற்றும் மீன்களை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்ட ஒரு காலத்தை பற்றி எனது மாமி அடிக்கடி நினைவூட்டுவார். இந்தக் கடைகளுக்கு செல்லும் ஒவ்வொருமுறையும் அவர் வெட்கப்பட்டது நினைவில் உள்ளதாக கூறுவார். ஏனென்றால் “தீண்டத்தகாதவர்கள்” (அதாவது குறைந்த சாதியினர்) எனும் மக்களிடையே அந்த உணவுவகைகள் இருந்தமையால், அவர் உண்ண வேண்டிய உணவு எது?, அது எங்கிருந்து வந்தது என்பதை அயலவர்கள் தெரிந்து கொள்ளவதை அவர் விரும்பவில்லை. ஆனால் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், இவை அனைத்தும் மாறிவிட்டன. இலங்கையிலிருந்து இந்திய தமிழர்கள் இந்தியாவிற்கே திரும்பியவுடன், அவர்களின் அன்றாட உணவின் முக்கிய அங்கமான மீன் இயல்பாக்கப்பட்டு, அவை விற்பதற்கு நகரப்புறக் கடைகளுக்கும் கொண்டுவரப்பட்டன. அசைவ உணவுக்கான கட்டுப்பாடுகள் குறித்து இலங்கையில் எந்தவொரு தெளிவும் இல்லாமலிருந்ததுடன், அத் தெளிவைப் பெற்றிருந்தவர்களுக்கும் அது தொடர்பான அறிவு பற்றாக்குறையாக இருந்தது.
பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் மற்றும் தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள், பிராமணர்கள் அரிதாக காணப்பட்டமையால் உண்மையில், அவர்கள் தென்னிந்தியாவிற்கு திரும்பியதும், பின்னர் கோவை மற்றும் தமிழ் நாட்டின் திருச்சியில் உள்ள கொடைக்கானலில் குடியேறியதும் சாதி அடிப்படையிலான பிளவுகளை ஓரளவு குறைத்து, பிராமண எதிர்ப்பு இயக்கங்களையும் அரசியல் இயக்கவியலையும் ஓரளவில் உருவாக்கியது என்பது பொய்யல்ல. ஆனால் அது இன்னுமொரு கட்டுரையினூடாக விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருச்சியில் வசித்து வந்த எனது மாமியை சந்தித்தபோது, நான் இடியப்பத்துடன் தேங்காய்ப்பால் சொதி சுவைப்பதற்கு காத்துக்கொண்டிருந்தேன். என் நம்பிக்கைகள் பொய்க்கவில்லை. சூடான இடியாப்பங்களுக்குள் கருப்பட்டி, தேங்காய் துண்டுகள், கருதமுக்கு மற்றும் பட்டை சேர்த்து தயாரித்த இனிப்புள்ள லெவரி சாப்பிட்டேன். ஆனால் எங்களுக்கு முன் சமையல் சொர்க்கத்தை அனுபவிப்பதற்கு பதிலாக, புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவு போன்ற சமகால இந்திய அரசியல் நடவடிக்கைகள் இலங்கையிலிருந்து வந்த இந்திய தமிழ் மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி பேசினோம். அவர்களின் குடியுரிமை, அவர்களின் உணவு, வரலாறு மற்றும் சமையல் முறைகள் ஆகியவற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லாவிட்டாலும், ஒரு ஓரினச் சேர்க்கையான இனவெறி இருக்கும் காலப்பகுதியில் , பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் எதையும், தனியார் இடங்களில் கூட, ஏதோ ‘அன்னிய’ மற்றும் சந்தேகத்திற்குரியதாக மாற்றிப் பார்க்கப்படும் இந்தக் காலத்தில், அவர்களின் குடியுரிமை, அவர்களின் உணவு, வரலாறு மற்றும் சமையல் முறைகள் ஆகியவை பிரச்சினைகளாக பார்ப்பதற்கும், அவை மறந்துப்போவதற்கும் அதிக காலவகாசம் தேவைப்பட மாட்டாது. மூன்று மாதங்களுக்கு முன்பு, திருச்சியில் கடைசிப் பாண் வியாபாரியும் இறந்துவிட்டார். அவரோடு, இந்திய தமிழ் வீடுகளில் ஒவ்வொரு வியாழக்கிழமையம் பாண் சாப்பிடும் வழக்கமும் மறைந்துவிட்டது. அவற்றை எப்படி உருவாக்குவது என்பது இப்போது யாருக்கும் தெரியாது. அதை யாரும் அறிய முயற்சிப்பதில்லை.
(இந்த கட்டுரையானது முதன்முறையாக ‘பொருளாதார மற்றும்அரசியல்’ (Economic and Political Weekly) எனும் வார இதழின் நான்காவது தொகுதியின் 18 வது பகுதியில் ‘The Paan on My Plate: From Bread to Identity’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. ‘படித்த’ தொகுப்பில் அதை மொழிபெயர்த்து வெளியிடுவதற்காக அனுமதி வழங்கிய அக்ஷ்யா கிருஷ்ணகுமார் அவர்களுக்கு ‘படித்த’ ஆசிரியர் குழு சார்பில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். அக்ஷ்யா கிருஷ்ணகுமார் அவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வாளர் ஒருவர். தற்போது அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கிறார். தென்னிந்திய சமூகங்கள் மற்றும் மரபுகளை ஆராய்வதற்கு அவருக்கு தீவிர ஆர்வம் உள்ளது.)